காஞ்சிபுரம் அருகே சென்னை-பெங்களுர் நெடுஞ்சாலையில் வெள்ளை கேட்டிலிருந்து அரக்கோணம் செல்லும் பஸ் போகும் வழியில் சென்றால் கோவிந்தவாடி அகரம் உங்களை பச்சை பசேலென மனதுக்கு ரம்மியமாய் கண்களுக்கு குளிர்ச்சியாய் வரவேற்கும்.
குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். அருமையான குரு தலம் இது என்று கூறலாம். காரணம் 5 அடி உயரத்திற்கு அருமையான வேலைப்பாடுகளுடன் அமைந்த பீடத்தில் பத்மாசனத்தில் குரு பகவான் காட்சி தருகிறார்.கோவிந்தன், கருடாஷ்வார், ஆஞ்சநேயர், ஸ்ரீதேவி, பூதேவி என்று குடும்பத்தோடு வந்து தங்கியிருந்து வழிபட்ட தலம்.அதனால் கோவிந்தபாடி என்று பெயர் பெற்றது. காலப்போக்கில் கோவிந்தவாடி என்று ஆகிவிட்டது.
ஆதிசங்கரர் இங்கே வந்து வழிபட்டிருக்கிறார்.இந்த ஆலயத்தில் ஒரு சிறப்ப உண்டு.ஒரே கோபுரத்தின் கீழே 2 சன்னதிகள் உள்ளன.அதில் கிழக்கு நோக்கியவாறு கைலாசநாதரும், தெற்கு நோக்கியவாறு குரு பகவானும் உள்ளனர்.
இங்கே விபூதி பிரசாதம்தான் மிகவும் விசேஷமாகும்.தாண்டவராய என்கிற மகானுக்கு தட்சணாமூர்த்தி விபூதி பிரசாதம் தந்து உபதேசம் செய்தாராம்.கோவிலுக்கு சற்று அருகில் கோவிந்தவாடி அகரம் என்கிற பகுதியில் தாண்டவராய சுவாமி மடம் இருக்கிறது. இதில் குரு பூஜை விசேஷமானது.
இங்குள்ள குரு பகவானுக்கு பச்சை கடலை மாலை விசேஷம்.தேங்காய் மூடியில் நெய் தீபம் ஏற்றுவதும் விசேஷமாக உள்ளது.
கோவிந்தவாடி சென்று குருபகவானை தரிசித்து அவர் அருளை அள்ளி வாருங்கள்.