பாவங்களைப் போக்கும் கும்பாபிஷேகம்
கும்பாபிஷேகம் செய்வதற்கு முன்பு மூல விக்கிரகத்தில் உள்ள சக்தியை கும்பத்துக்கு வரவழைப்பார்கள். பிறகு கும்பத்தில் உள்ள சக்தியை பாலாலயம் செய்து தினமும் பூஜை செய்து வருவார்கள். யாகசாலை பூஜைகள் தொடங்கியதும் பாலாலயத்தில் இருந்து சக்தியைப் பெற்று புனித நீர் நிரம்பிய கும்பத்தில் வைத்து சிறப்பு ஆராதனைகள் நடத்தப்படும்.அந்த புனித நீருக்கு வேத பாராயணங்களால் சக்தி ஏற்றப்படும். பிறகு அந்த புனித நீர் அபிஷேகம் செய்யப்படும். இந்த கும்பாபிஷேகத்தை நடத்த நம் முன்னோர்கள் 64 விதமான சடங்குகளை செய்தனர். பிறகு அது 55 சடங்குகளாகக் குறைந்தது. ஆனால் தற்போது வாழ்வியல் நடைமுறைகளில் மாபெரும் மாற்றங்கள் வந்து விட்டதால், 13 மிக முக்கிய சடங்குகளை மட்டுமே கும்பாபிஷேகத்துக்கு பின்பற்றுகிறார்கள்.இவற்றை செய்யாமல் எந்த கும்பாபிஷேகத்தையும் நடத்த முடியாது. முதலில் கும்பாபிஷேகத்துக்கு என கிடைக்கும் பொருட்களுக்கு பூஜை செய்வார்கள். இதற்கு தன பூஜை என்று பெயர். இந்த தனத்தில் ஒரு பகுதியை கட்டிட பணிக்கும், மற்றொரு பகுதியை பூஜைகளுக்கும், இன்னொரு பகுதியை ஆபரணங்கள் வாங்குவதற்கும் என்பன உள்பட 11 பிரிவுகளாகப் பிரித்து பயன்படுத்துவார்கள். இதைத் தொடர்ந்து நடக்கும் 13 கிரியைகள் எனப்படும் சடங்குகள் தான் முக்கியமானவை.அதன் பிறகு மண்டலாபிஷேகம் நடைபெறும். 48 நாட்கள் நடக்கும் மண்டலாபிஷேகத்தின் போது நாம் ஆலயத்துக்கு சென்று வழிபட்டு வந்தால் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட புண்ணியம் கிடைக்கும். மூன்று கும்பாபிஷேகத்தை யார் ஒருவர் காண்கிறாரோ அவர் பாவங்கள் விலகி விடும் என்பது ஐதீகமாகும்.மகா கும்பாபிஷேகம் நடந்து முடிந்த பிறகு 48 நாட்களுக்கு மண்டல பூஜைகள் தினமும் நடத்தப்படும். இந்த 48 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் கோவிலுக்கு சென்று மனம் உருகி வழிபட்டால் கும்பாபிஷேகத்தை கண்டுகளித்த பலன் கிடைக்கும்.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாக குண்டங்களில் அரிய மூலிகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் போடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பூஜைகள் நடத்தி முடிக்கப்பட்ட பிறகு யாக குண்டங்களில் தேங்கும் புனித சாம்பல் பக்தர்களுக்கு வழங்கப்படும்.இந்த புனித சாம்பல் மிக, மிக சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. அது நோய் தீர்க்கும் ஆற்றல் கொண்டது